சென்னை: உலக இசை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் மைக்கேல் ஜாக்சன். 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த அவர், பாப் இசையின் சாம்ராட்டாக உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தார். 2009ஆம் ஆண்டு அவர் மறைந்துவிட்டாலும், அவரது கலைச் சாதனைகள் இன்னும் உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அஜித் மனைவியான நடிகை ஷாலினி, மைக்கேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மெழுகுச்சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் தனது வாழ்நாளில் பல விமர்சனங்களையும், பல சாதனைகளையும் சந்தித்தவர். தனது தோல் நிறத்தை மாற்றியமைத்தது பெரும் விவாதமாக இருந்தாலும், அவரது பாடல்களின் தாக்கம் உலகம் முழுவதும் இசையை நேசிக்கும் மக்களிடையே தனித்துவத்தை பெற்றது. குறிப்பாக “Thriller”, “Beat It”, “Billie Jean” போன்ற ஆல்பங்கள் இன்று கூட அதிகம் விற்பனையாகும் படைப்புகளாக விளங்குகின்றன. மேடையில் அவர் வெளிப்படுத்திய மூன் வாக் நடனம், ரசிகர்களை மயக்கி வைத்திருக்கும் ஒரு தனித்துவமான சின்னமாக உள்ளது.
அவரது இசை மட்டும் அல்லாமல் மனிதநேய பணிகளும் உலகம் முழுவதும் புகழ்பெற்றன. 39 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்த மைக்கேல், “Heal the World” பாடலின் மூலம் அமைதியும் அன்பும் நிறைந்த உலகைக் கோரினார். மேலும், 13 கின்னஸ் சாதனைகள் மூலம் அவர் இசை உலகில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றார். 1984ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் எட்டு கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
இன்று அவரது 67வது பிறந்த நாளில் உலகம் முழுவதும் ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்தனர். பல நகரங்களில் நினைவு நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன், ஷாலினி பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் பரவி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் இசை பயணம், அவரது வாழ்நாள் குறுகியதாக இருந்தாலும், உலகம் இருக்கும் வரை இசை ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் என்பது உறுதி.