திரையுலகில் சட்டவிரோத பதிவேற்றங்கள் பெரும் சவாலாக நீண்டகாலமாக உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் போல, தெலுங்கில் ‘ஐபொம்மா’ என்ற இணையதளம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் புதிய படங்களும், ஓடிடி தளங்களில் வரும் வலைத்தொடர்களும் சில மணி நேரங்களில் இந்த தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இதனால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.

அண்மையில், தெலுங்கானா காவல்துறை மீது ‘ஐபொம்மா’ திறந்தவெளியில் மிரட்டல் விடுத்துள்ளது. “எங்களை குறிவைத்தால், நாங்கள் யாரை குறிவைக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்” என எச்சரித்ததோடு, 5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் விவரங்களை வெளிக்கொண்டு வருவோம் என்றும், ஹீரோக்களின் ரகசியங்களையும் அம்பலப்படுத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளது. இது சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ஹீரோக்களுக்கு வழங்கப்படும் அதிக சம்பளம், தேவையற்ற வெளிநாட்டு படப்பிடிப்பு செலவுகள், விநியோகஸ்தர்களுக்கு அசாதாரண விலைக்கு விற்கப்படும் பட்ஜெட் விவகாரங்கள் குறித்தும் ‘ஐபொம்மா’ கடுமையாக விமர்சித்துள்ளது. இதன் காரணமாக, டிக்கெட் விலைகள் உயர்ந்து, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.
சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த காவல்துறை எச்சரிக்கைகள் விடுத்தும், ‘ஐபொம்மா’ தளம் தன் நிலையை விட்டு விலகாமல், மாறாக மிரட்டல்களை அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருங்காலத்தில் அரசும், காவல்துறையும் இதை முற்றிலுமாக அடக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.