சென்னை: புதுமுக இயக்குனர் ரங்கராஜ் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கட்ஸ்’. சமீபத்தில் பெரும் சர்ச்சையில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி நாராயணன் கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீலேகா ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சாய் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜோஸ் பிராங்க்ளின் இசையமைத்துள்ளார்.
ஓபிஆர்பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். படம் குறித்து ஸ்ருதி நாராயணன் கூறும்போது, ’எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பின் போது எனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்து என்னை நடிக்க வைத்தார்.’

பின்னர், ரங்கராஜ் கூறுகையில், ‘சினிமாவில் நடிக்க 25 ஆண்டுகள் போராடினேன். நான் வாய்ப்பு கேட்டபோது, பதிலுக்கு பணம் கேட்டார்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர்கள் குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்தார்கள். 15 லட்சம் ரூபாயில் படம் பண்ணலாம் என்று சொன்னதை நம்பி தயாரிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், வெறும் 15 லட்சம் ரூபாயில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று பின்னர் தெரிந்துகொண்டேன். கிராமத்தில் இட்லி சுட்டு விற்கும் சாதாரண தாயின் மகனாக பிறந்து, இன்று ஹீரோவாகிவிட்டேன்,” என்றார்.