திருவனந்தபுரம்: கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவைச் சேர்ந்தவர் அலியார் ஷா சலீம் (28). கொச்சியில் உள்ள ஒரு ஐடி பூங்காவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பானர்ஜி சாலையில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, பாரில் ஒரு கும்பலுடன் சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு, அலியார் ஷா சலீம் தனது காரில் சென்றுவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல் அலியார் ஷாவின் காரை வழிமறித்தது. பின்னர், அவரை காரில் இருந்து இறக்கி, தங்கள் காரில் கடத்தி, தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அலியார் ஷா சலீம் கொச்சி வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ரஞ்சித், அனீஷ் மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சோனா என்ற இளம் பெண் ஆகியோர் அலியார் ஷாவைத் தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில், தன்னைத் தாக்கிய கும்பலில் பிரபல நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக அலியார் ஷா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மென்பொருள் பொறியாளரைக் கடத்தித் தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.