
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில், ஸ்ரீ ரமண மகரிஷியின் 75ஆம் ஆண்டு ஆராதனை விழா சீரிய முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 90களின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆன சுகன்யா பங்கேற்றார். இவர் ரமணருக்கு அர்ப்பணையாக ஒரு பக்திப் பாடலை உணர்வோடு பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரதநாட்டியம் மற்றும் இசை மீது தனிப்பட்ட காதல் கொண்ட சுகன்யா, கலைஞராக மட்டுமின்றி ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் இந்த நிகழ்வில் பங்கேற்றதை ரசிகர்கள் பெருமையாகக் கொண்டாடி வருகின்றனர். சுகன்யா, பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இளையராஜா இசையமைத்த இந்த படத்தில் இடம்பெற்ற ‘கருத்த மச்சான்’ பாடல் இன்று வரை தமிழ் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் ஹிட் பாடலாக இருந்து வருகிறது.
அந்த ஒரு படத்தால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக பரிணமித்தார். எனினும் சுகன்யாவுக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் வந்தபோதும், அவருக்கு ஆரம்பத்தில் சினிமாவைத் தேர்வு செய்யும் எண்ணமே இல்லையாம். ஆனால், பெற்றோர் வலியுறுத்தலால் சினிமாவில் கால்பதிக்க நேர்ந்தது.
முதல் படமே வெற்றி பெற்றதையடுத்து, ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் மீனாவின் கதாபாத்திரத்திற்கு சுகன்யாவை தேர்ந்தெடுக்க திட்டமிட்டனர். ஆனால், கால்ஷீட் பிரச்சனையால் அந்த வாய்ப்பு மீனாவுக்கு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமாவில் வெற்றிகரமாக பங்களித்து வந்த சுகன்யா, 2002ஆம் ஆண்டு தொழிலதிபர் ஸ்ரீதர் ராஜகோபாலை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா குடியேறினார். ஆனால், ஒரே ஆண்டில் இருவருக்கும் மன வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து செய்துகொண்டு மீண்டும் இந்தியா திரும்பினார்.
தொடர்ந்து சினிமா மற்றும் சீரியல் தளங்களில் அவ்வப்போது தோன்றிய சுகன்யா, சன் டிவியின் ‘ஆனந்தம்’ சீரியலில் நடித்ததோடு, சில சோலோ இசை ஆல்பங்களையும் வெளியிட்டார். மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடந்த 75ஆவது ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு, ஒரு பக்திப் பாடலை முழு உணர்வுடன் பாடிய சுகன்யாவின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதன் பின்னர் ஆசிரமத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் மனதுள் அமைதி நிறைந்த ஒரே தருணமாக இதை அனுபவித்தனர்.
பல்வேறு சூழ்நிலைகளை கடந்து தற்போது ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் சுகன்யா, தனது இசை மற்றும் பண்பாட்டு பங்களிப்புகளால் மீண்டும் ஒரு முறை கவனத்தை ஈர்த்து வருகின்றார்.