பழனி: நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி, நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது 25-வது திருமண நாளையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு இன்று காலை குடும்பத்தினருடன் வந்தனர். முன்னதாக சுந்தர் சி பழனி மலை அடிவாரத்தில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பின்னர், தனது குடும்பத்துடன் மலையடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கு மின்சார இழுவை ரயில் (வின்ச்) மூலம் சென்றார். அங்கு விளா பூஜையில் பங்கேற்று சந்நியாசி வேடம் அணிந்த தண்டாயுதபாணியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர், தங்களது 25-வது திருமண நாளை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மேலும் மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதி, போகர் ஜீவ சமாதி ஆகிய இடங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இயக்குனர் சுந்தர். சி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கோவிலுக்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர், வின்ச் ரயில் மூலம் மலையடிவாரத்தை அடைந்து காரில் புறப்பட்டனர்.