
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில், 6 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் பாடும் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாடகர் மனோ, பாடகி சித்ரா, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். வரும் 12-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ‘சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்’ சுற்று இடம்பெறவுள்ளது. இதில் ரஜினியின் ஹிட் பாடல்களை தேர்வு செய்து பாடுவார்கள். இதில் சிறப்பாக பாடுபவர்களுக்கு ரஜினிகாந்த் கையெழுத்திட்ட கிடார் பரிசாக வழங்கப்படும்.