சூர்யா தனது நடிப்பு பயணத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு, வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் 46வது படத்தில் நடித்து வரும் நிலையில், சூர்யாவின் 47வது திரைப்படம் பற்றிய தகவல்கள் பரவலாகக் கிளம்பியுள்ளன. பஹத் பாசிலை வைத்து இயக்கிய ‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ஜீத்து மாதவன் தான் சூர்யா 47 இயக்குநராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவலுக்கு மேலாக, சூர்யா 47 படத்தில் மோகன்லாலும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது பெரும் ஹைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘காப்பான்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், மீண்டும் அவர்கள் ஒன்றிணைவது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மோகன்லால் தமிழ் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத பார்வையாளர் ஈர்ப்பைக் கொண்டவர் என்பதால், இந்த படம் தரமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 47 ஒரு போலீஸ் கதையா இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், இது அவர் இதுவரை செய்துள்ள போலீஸ் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். அதிலும் சூர்யா ஒரு நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அவருடைய ரசிகர்களிடையே ஒரு புதிய முயற்சியாகவும், சவால் நிறைந்த வேடமாகவும் கருதப்படுகிறது. இப்படம் குறித்த விவரங்கள் இன்னும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
சூர்யாவின் பிறந்த நாள் ஜூலை 23 அன்று, சூர்யா 47 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே ‘கருப்பு’ பட டீசர் அந்த நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதே நாளில் 47வது படத்திற்கான அறிவிப்பும் வந்துவிட்டால், சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாகும். சமீப காலமாக, கார்த்திக் சுப்புராஜ், ஆர்ஜெ பாலாஜி, வெங்கி அட்லூரி உள்ளிட்ட எதிர்பாராத இயக்குனர்களுடன் பணியாற்றும் சூர்யா, தற்போது ஜீத்து மாதவனுடன் இணையும் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையே மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.