நடிகர் விஜய் அரசியல் களத்தில் செயல்படத் தொடங்கிய பிறகு, அவரது விமர்சனங்கள் பெரும்பாலும் திமுகவையே குறிவைத்துள்ளன. இதேபோல, சமீபத்தில் சமூக வலைதளங்களில், நடிகர் சூர்யா திமுகவில் இணைந்து, விஜய்க்கு எதிராக 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளார் என்ற தகவல்கள் பரவத் தொடங்கின. இந்த பரப்புரை விரைவாக வைரலான நிலையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மன்றம் – அகில இந்திய சூர்யா ரசிகர்கள் நற்பணி இயக்கம் – இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விளக்கத்தில், “சமீப நாட்களாக இணையத்தில் பரவி வரும், சூர்யா அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. இது அவருடைய கோட்பாடுகளுக்கும் நேர்மையான வாழ்க்கை நடைக்கும் முரணானது,” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சூர்யா கருப்பு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், அவரது அகரம் அறக்கட்டளை கடந்த மாதம் 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இவைதான் அவர் வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இருக்கின்றன என்றும், அரசியல் குறித்து எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் குழப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த விளக்கம் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா தனது சினிமா பயணத்திலும் சமூக சேவையிலும் முழு கவனத்துடன் இருக்கிறார். ரசிகர்கள் இதனை புரிந்து கொண்டு தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்பதே ரசிகர் மன்றத்தின் வேண்டுகோள்.