விஜயகாந்தின் 100வது படமாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படம், மாபெரும் வெற்றி பெற்று இன்று வரை ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறது. இளையராஜா இசையமைத்த இப்படம் தான் விஜயகாந்த் “கேப்டன்” என்று அழைக்கப்படும் பெயரை பெற்றுத் தந்தது.

34 ஆண்டுகள் கழித்து, நவீன தொழில்நுட்பத்துடன் இப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல், கேப்டனின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன் ஆகியோரும் தியேட்டரில் படம் பார்த்துள்ளனர். அப்போது திரையில் விஜயகாந்தை பார்த்ததும் பிரேமலதா கண்கலங்கிப் கதறி அழுத காட்சி இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை உருக்கியுள்ளது.
படம் வெளியான காலத்தில் அரசியல் சூழ்நிலையையே பிரதிபலித்த வசனங்கள், இன்றும் பொருத்தமாக இருக்கின்றன என்று வில்லன் வேடத்தில் நடித்த மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இயக்குநர் செல்வமணியின் துணிச்சலும், வசனகர்த்தா லியாகத் அலிகானின் வரிகளும், படத்தை மறக்க முடியாததாக ஆக்கியது என்று அவர் கூறினார்.
வீரப்பன் கதையை தழுவி உருவான இப்படம், கேப்டனின் வீரத் தோற்றத்தையும், மக்களின் அன்பையும் வெளிப்படுத்தியது. இதுவே அதன் வெற்றிக்குக் காரணம் என்றும், ரசிகர்களின் ஆதரவு தான் விஜயகாந்தின் வாழ்நாளில் மிகப்பெரிய பலம் என்றும் மன்சூர் அலிகான் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
சென்னையில் நடந்த சிறப்பு திரையிடலில், படக்குழுவினரும், ரசிகர்களும் இணைந்து கொண்டாடியுள்ளனர். படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கேப்டன் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்த இந்த ரீ-ரிலீஸ், ரசிகர்களுக்கு ஒரு உணர்ச்சி பூர்வமான தருணமாக மாறியுள்ளது.