தெலுங்கு திரைப்பட உலகின் முக்கிய நடிகரான கோட்டா சீனிவாச ராவ் ஜூலை 13ஆம் தேதி ஹைதராபாத்தில் காலமானார். தனது 83வது பிறந்த நாளைக் கொண்டாடி இரண்டு நாட்களிலேயே நீண்டநாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பல்துறை நடிப்புத் திறனுக்காக பரவலாக பாராட்டப்பட்ட அவர், 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி நடித்த “பிராணம் கரீடு” படத்தின் மூலம் 1978-ல் திரையுலகில் காலடி வைத்தார். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ள அவர், “சாமி”, “திருப்பாச்சி”, “ஆல் இன் ஆல் அழகுராஜா” போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார்.

அவரது மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலி அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியபோது ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்றார். அந்த தருணத்தில் கோபமடைந்த ராஜமெளலி அந்த ரசிகரை தள்ளிவிட்டு தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்பின், எக்ஸ் தளத்தில் ராஜமெளலி, கோட்டா சீனிவாச ராவின் நினைவாக உருக்கமான பதிவொன்றை பகிர்ந்தார். “அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உயிர் கொடுத்த ஒரு ஜாம்பவான்” என குறிப்பிட்ட அவர், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திரையுலகில் தொடர்ந்து பழம்பெரும் நடிகர்களான கோட்டா சீனிவாச ராவும், சரோஜா தேவியும் மறைவதால் சினிமா ரசிகர்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர். ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலர்கள் அவர் செய்த பங்களிப்பை நினைவு கூறி மரியாதை செலுத்தி வருகின்றனர்.