சென்னை : குடும்பஸ்தன் படத்தில் நான் நடிக்க இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு என்னிடமிருந்து நழுவி சென்று விட்டது என நடிகர் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாளின் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது டென் ஹவர்ஸ்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சிபி சத்யராஜ் கூறியதாவது: இந்தப் படத்தை நிறைய பேர் கைதி திரைப்படத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்கள்.
இரண்டு படங்களிலும் லுக் ஒரே மாதிரி இருக்கிறது, இரண்டுமே ஒரு இரவில் நடந்து முடியும் கதை. அப்புறம், படத்தின் முதல் லுக் போஸ்டரை கார்த்தி அண்ணா வெளியிட்டார், டிரெயிலரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அதனால் இந்தப் படம் அந்தப் படத்தின் யூனிவர்ஸில் இருக்குமா என்று கூடப் பேசினார்கள். ஆனால், அந்தப் படங்களுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இந்தப் படத்தை ஒப்புக்கொண்டது கதைக்காக. இதில் வரும் கெட்-அப் இதற்கு முன்பு நான் போட்டதில்லை. போலீஸாக நிறையப் படங்கள் பண்ணியிருக்கிறேன்.
மறுபடியும் போலீஸாக நடிக்கும்போது வித்தியாசமான ஒரு தோற்றம் தேவைப்பட்டது. அந்த வகையில் என் கேரியரில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் இருந்திருக்கிறது.
நாய்கள் ஜாக்கிரதை நல்லா போனது, ஜாக்சன் துரை நல்லா போனது, சத்யா நல்லா போனது. ஆனால், அடுத்த சில படங்கள் எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்திருக்கலாம். நம்மைவிடச் சிறந்த நடிகர்கள் நிறைய பேர் இருப்பார்கள், நம்மைவிடக் குறைவாகவும் நிறையப் பேர் இருப்பார்கள். கடந்த படத்துக்கும் இந்தப் படத்துக்கும் நாம் என்ன வித்தியாசமாகச் செய்திருக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
குடும்பஸ்தன்’ கதை எனக்கு வந்தது. ஆனால், சில காரணங்களால் அது மிஸ் ஆகிவிட்டது. எனக்கு அந்தப் படம் பார்க்கும்போது, அந்தக் கேரக்டருக்கு மணிகண்டன் செய்த நியாயம் வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்று தோன்றியது. அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அப்படி மிஸ் ஆன இன்னொரு படம் ‘மரகத நாணயம்’. அது எனக்கு வந்த கதை. அப்போதான் ஜாக்சன் துரை ஹாரர்-காமெடி பண்ணியிருந்தேன்.
உடனே இன்னொரு ஹாரர்-காமெடி வேண்டாம் என்று அதைப் பண்ணவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.