சென்னை: பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் 2013-ம் ஆண்டு தனது பள்ளி நண்பரும் சினிமா பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக திருமண உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், நிரந்தரமாக பிரிந்து செல்ல முடிவு செய்த இருவரும், பரஸ்பர விவாகரத்து கோரி மார்ச் 24, 2025 அன்று சென்னை குடும்ப நீதிமன்றத்தில் நேரில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், இருவரும் இணக்கமாக பிரிந்து செல்வதாக கூறியிருந்தனர். விளம்பரம் இந்த மனுவை தாக்கல் செய்த சென்னை முதல் கூடுதல் குடும்ப நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, சட்டப்படி ஆறு மாத கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார்.

ஆறு மாத கால அவகாசம் முடிந்த பிறகு, வழக்கு செப்டம்பர் 25 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். விவாகரத்து பெறும் முடிவில் தாங்கள் உறுதியாக இருப்பதாக இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர்.
சைந்தவி குழந்தையை கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் குமார் நீதிபதியிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று வழக்கில் தீர்ப்பளித்த குடும்ப நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி தம்பதியினருக்கு பரஸ்பர விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.