சென்னை: ‘சிக்கந்தர்’ விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் ரீமேக் என்று இணையதில் தகவல் பரவியது. ஆனால் இதற்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கதாநாயகனாக சல்மான்கான் நடித்துள்ள படம் ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
சமீபகாலமாக , ‘சிக்கந்தர்’ விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் ரீமேக் என்று இணையதில் தகவல் பரவி வருகிறது. மேலும், படத்தின் டீசரும் பிரபாஸ் நடித்த சலார் படத்தை நினைவூட்டுவதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் படம் எந்தப் படத்தின் ரீமேக்கும் இல்லை என்று உறுதிபடக் கூறி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இது தொடர்பாக அவர் கூறுகையில், ”சிக்கந்தர்’ முற்றிலும் புதிய கதை. இது எந்தவொரு படத்தின் ரீமேக்கோ அல்லது தழுவலோ இல்லை’ என்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.