சென்னை : ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடல் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பியார் பிரேம காதல், ஹை ஆன் லவ், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
பியார் பிரேம காதல் படத்தைத் தவிர மற்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தயாரித்த அனைத்து படங்களும் ரசிக்கக்கூடிய வகையிலேயே உருவாகியிருந்தன.
நாயகனாக நடிகர் ரியோ ராஜ் நடிக்க அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கியுள்ள திரைப்படம், ‘ஸ்வீட்ஹார்ட்’.
காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கோபிகா ரமேஷ் நாயகியாகவும் ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான அவ்ஸம் கிஸா என்ற கானா பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்த நிலையில், ஸ்வீட்ஹார்ட் படத்தின் புதிய பாடலான ’கதவைத் திறந்தாயே’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்பாடலை யுவன்சங்கர் ராஜா, சிந்துரி விஷால் ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.