தமிழகத்தில் ‘அமரன்’ வசூல் பல வர்த்தக நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் இறுதி வசூலில் பங்குத் தொகை 60 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு பெரிய நடிகர்களின் படங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. படக்குழுவினரை பல்வேறு திரையுலகினர் பாராட்டி வரும் நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
வெற்றி தியேட்டர் உரிமையாளர் ராகேஷ், ஜிகே சினிமாஸ் உரிமையாளர் ரூபன், உமா ராஜேந்திரா திரையரங்க உரிமையாளர் அஸ்வத் துரைமோகன் ஆகியோர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சிவகார்த்திகேயன் அவர்களிடம் படத்தின் வசூல் நிலவரம் மற்றும் மக்களிடம் உள்ள வரவேற்பு குறித்து கேட்டறிந்தார்.
சுமார் ஒன்றரை மணி நேரம் திரையுலக நிலவரம் குறித்தும் பேசினர். இந்த சந்திப்பு குறித்தும், சிவகார்த்திகேயனின் எளிமை குறித்தும் தியேட்டர் உரிமையாளர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகிறார்கள்.