சென்னை: “தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் “ என்று பத்மபூஷன் விருது குறித்து அஜித்குமார் எமோஷனல் பதிவிட்டுள்ளார்.
நாட்டிற்காக உயர்நிலையில் சேவையாற்றியவர்களை கவுரவிப்பதற்காக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டது குறித்து அஜித்குமாரன் நன்றி தெரிவிக்கும் வகையில், தன்னுடைய மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அஜித் கூறியிருப்பதாவது: இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன். எனது குடும்பம் மற்றும் நண்பர்களின் அளவற்ற அன்பும் ஆதரவும்தான் எனது பலம். நன்றி! இந்த நாளைக் காண என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின் நிபந்தனையற்ற அன்புக்கும், நான் என்னவாக விரும்பினேனோ அதுவாக மாற உதவிய அவரது தியாகங்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
கடந்த 25 ஆண்டுகளில் எனது அனைத்து சந்தோஷங்களிலும் வெற்றிகளிலும் துணையாக இருந்த என் மனைவியும் தோழியுமான ஷாலினி எனது பக்கபலம். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக்தான் என் பெருமை மற்றும் என் வாழ்க்கையின் ஒளி! சிறப்பாக செயல்படுவது மற்றும் சரியாக வாழ்வது எப்படி என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க என்னை ஊக்குவிக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.