சென்னை: ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி காந்த் மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். லால் சலாம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து, லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘வேட்டையன்’ ஒரு ஆக்ஷன் படம் என சொல்லப்படுகிறது. துஷரா விஜயன், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா என பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், நாகர்கோவில், கன்னியாகுமாரி மற்றும் கேரளா என பல இடங்களிலும் நடந்தது. இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான டப்பிங் வருகிற 8-ந் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ‘கூலி’ படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ், உங்களுடன் மீண்டும் ஒருமுறை இணைந்ததில் மகிழ்ச்சி கிரிஷ் கங்காதரன்… விரைவில் கூலி படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.