சென்னை : நடிகர் அஜித்தின் வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த மாதம் விடாமுயற்சி படம் வெளியானது. இந்த படத்தில் அஜித் இதுவரை நடிக்காத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
அதனை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துள்ளார். இதில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சண்டை கோழி, அஞ்சான், பையா போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் லிங்குசாமி அஜித்தின் வெற்றிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார். அதாவது, “ஜி படத்தின் சூட்டிங்கின்போது கேரவனில் நாங்கள் இருவரும் பேசி கொண்டு இருந்தோம்.
அப்போது அவர் என்னிடம் ‘ஜி நம்மதான் ஜி, முதல் இடத்தில் நம்மதான் ஜி வருவோம்’ என்று கூறுவார். படத்தின் டப்பிங்கின் போது 50 தடவை பேச சொன்னாலும் பேசுவார். படத்திற்கு தேவையான முழு உழைப்பையும் தருவார். அது தான் அவரது வெற்றிக்கும் தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் இருக்க காரணம்” என்று தெரிவித்துள்ளார்.