பெங்களூரு: கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். நான் ஈ, புலி, பாகுபலி, முடிஞ்சா எவன புடி போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கர்நாடகாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2019-ம் ஆண்டு வெளியான ‘பயில்வான்’ படத்திற்காக நடிகர் கிச்சா சுதீப் சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டார்.
கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு விருது பட்டியலை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப் இந்த விருதை ஏற்க மறுத்துள்ளார். இது தற்போது கர்நாடக திரையுலகில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- மதிப்பிற்குரிய கர்நாடக அரசு மற்றும் ஜூரி உறுப்பினர்கள், சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருது பெற்றது ஒரு பாக்கியம்.
மேலும் இந்த மரியாதைக்காக நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், எனது தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக விருதுகள் பெறுவதை தவிர்த்து வந்தேன். இந்தக் கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் என்னை விட தகுதியான ஒருவருக்கு இந்த விருது கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். விருதுகளைப் பொருட்படுத்தாமல் எனது முழு மனதுடன் அனைவரையும் மகிழ்விக்க விரும்புகிறேன்.
நடுவர் மன்றத்தின் இந்த அங்கீகாரம் என்னை ஊக்கப்படுத்தியது. இந்த அங்கீகாரம் எனது வெகுமதி என்பதால், என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒவ்வொரு ஜூரி உறுப்பினர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு ஜூரி உறுப்பினர்களிடமும், மாநில அரசிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது முடிவை மதித்து நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னை பரிசீலித்த மாண்புமிகு ஜூரி உறுப்பினர்களுக்கும், மாநில அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.