தமிழ் சினிமாவில் தனது பீக் நேரத்தில் அரசியல் மேடை ஏறியவர் வடிவேலு. அப்போது விஜயகாந்த்தோடு ஏற்பட்ட மோதல் காரணமாக, மேடைகளில் அவரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் விஜயகாந்த் ஒருபோதும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். காலப்போக்கில் இந்த பிரச்சினை ஓய்ந்துவிட்டாலும், வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போனது.

வடிவேலு சினிமாவில் புதிதாக அறிமுகமானபோது, கவுண்டமணி–செந்தில் ஜோடி உச்சத்தில் இருந்தது. அவருக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதாகவும், சில படங்களில் கூட நடிக்க விடாமல் கண்டிஷன் வைத்ததாகவும் பேச்சுகள் இருந்தன. ஆனால் விஜயகாந்த்தின் ஆதரவால் அவர் பல படங்களில் நடித்தார். குறிப்பாக தவசி, எங்கள் அண்ணா போன்ற படங்களில் இருவரின் கூட்டணி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் ஒரு சம்பவம் காரணமாக வடிவேலு, விஜயகாந்த்துக்கு எதிரியாக மாறினார். இதன் பின்னர் 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்த அவர், விஜயகாந்த்தை மேடைகளில் கடுமையாக தாக்கினார். ஆனால் விஜயகாந்த் ஒருபோதும் எதிர்வினை காட்டவில்லை.
அதன்பின் காலம் மாறி, விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, வடிவேலு அவரது இறுதிச் சடங்கிற்கு செல்லவில்லை. இதுவே பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் அவரின் தரப்பினர், தேவையற்ற பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கவே அவர் செல்லவில்லை என்று கூறினர்.
சமீபத்தில் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன், ஒரு நிகழ்ச்சியில் வடிவேலுவைப் பற்றி பேசியது கவனம் ஈர்த்துள்ளது. “எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அதேபோல வடிவேலு மாமாவையும் பார்த்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு போய்விட்டார். சிறு வயதில் இருந்தே நாங்கள் துரோகத்தை பார்த்துவிட்டோம். அதனால் இன்று யாராவது ஏமாற்றினாலும் அதிர்ச்சி இல்லை” என்று அவர் கூறினார்.
இதனால், வடிவேலு–விஜயகாந்த் உறவில் ஏற்பட்ட பிளவு மீண்டும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.