வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ‘கோட்’ படம் கலவையான விமர்சனங்களுடன் வெளியாகி, 455 கோடி ரூபாய் வசூலித்து வியப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து படம் இயக்குவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது, ஆனால் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புகள் இல்லை.

இப்போது அவரின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என்றும் தெரிகிறது. தற்போது முன்தயாரிப்பு பணிகளில் வெங்கட்பிரபு ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த படம் டைம் டிராவல் ஜானரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெங்கட்பிரபு இதைப் பற்றி கூறியுள்ளார்: “சிவகார்த்திகேயனும் நானும் இணையும் படம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும். இதற்கான இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா இருப்பார்” என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இதனை மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.