விஷால் பிலிம் ஃபேக்டரிக்காக கோபுரம் பிலிம்ஸிடமிருந்து பெற்ற ரூ.21.29 கோடி கடனை ஏற்றுக்கொண்டு செலுத்தினார். இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பிலிம்ஸ் தயாரித்த அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை மீறி விஷால் பிலிம்ஸ் படங்களை வெளியிடுவதாகக் கூறி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21.29 கோடியை 30 சதவீத வட்டியுடன் செலுத்துமாறு விஷாலுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என். செந்தில்குமார் முன் நடைபெற்றது.

லைகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ‘மகுடம்’ படத்தில் நடிக்க நடிகர் விஷால் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, அந்தப் படத்திற்காகப் பெற்ற தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.
இதையடுத்து, இது தொடர்பாக விஷால் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.