சென்னையின் அண்ணாநகரில் நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்நிகழ்வில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். சமூக வலைத்தளங்களில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

திரை உலகில் 2004ஆம் ஆண்டு செல்லமே திரைப்படம் மூலம் அறிமுகமான விஷால், சண்டகோழி, திமிரு, தாமிரபரணி, அவன் இவன், பாண்டியநாடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தனது 35வது படமான மகுடம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக ரசிகர்கள் அவரின் திருமணத்தை எதிர்பார்த்து வந்த நிலையில், சாய் தன்ஷிகாவுடன் இணையும் விஷயத்தை அவர் தானே அறிவித்திருந்தார்.
48 வயதாகும் விஷால், நடிகர் சங்க கட்டடம் முடிந்த பிறகே திருமணம் செய்வேன் என்று முன்பே கூறியிருந்தார். இதேபோன்று சமீபத்தில் நடைபெற்ற யோகி திரைப்பட விழாவில் அவர், சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது கூறப்பட்ட திருமண நாள் நெருங்கியும் எந்த ஏற்பாடுகளும் இல்லாததால் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், அவரின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால், “இந்த ஆண்டுக்குள் என் திருமணம் நடைபெறும்” என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.