சென்னை: நடிகர் விஷால் தனது 48வது பிறந்த நாளை வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாட உள்ளார். அன்றைய தினம் நடிகை சாய் தன்ஷிகாவுடன் தனது திருமண தேதியை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகிலும், ரசிகர்களிடமும் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் “மாப்பிள்ளை ரெடி ஆயிட்டாரு, எப்போது கல்யாணம்?” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஷால் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக “மொரட்டு சிங்கிள்” என அழைக்கப்பட்டவர். மேலும் அவர் தற்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். நடிகர் சங்க கட்டிடப் பணிகள் முடிந்த பிறகே தான் திருமணம் செய்வேன் என அவர் முன்பு அறிவித்திருந்தார். தற்போது அந்த கட்டிடம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதே இடத்தில்தான் விஷால் – சாய் தன்ஷிகா திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, விஷால் உடல் நல பிரச்சினையால் கைகள் நடுங்கியதாக பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால் தற்போது அவர் உடல் ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் பயிற்சி மேற்கொண்டு வருவது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
அவரது அடுத்த படமாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99வது படத்தில், துஷாரா விஜயனுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சாய் தன்ஷிகாவின் யோகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இவர்களின் திருமண தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வரும் 29ஆம் தேதி, விஷால் தனது பிறந்த நாளில் திருமண தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வெளிவந்த அவரது வொர்க்அவுட் வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி, “இனிமேல் கை நடுங்குது, கால் நடுங்குதுனு யாரும் சொல்ல முடியாது” என்கிற வகையில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, விஷால் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.