நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை வெளியாவதாக உறுதியாகியுள்ளது. படத்தின் கதை பிரிட்டிஷ் காலத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது, படத்தின் வெளியீடு கடுமையான நிதி சிக்கல்களால் கேள்விக்குறியாகி இருந்தது. ஞானவேல் ராஜா, மறைந்த அர்ஜுன் லால் சுந்தரிடம் ரூபாய் 10 கோடியே 35 லட்சம் கடன் பெற்ற நிலையில், அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமலிருந்தது. ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரனை திவாலானதாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள தங்காலன், கங்குவா ஆகிய படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையில், நீதிபதி ‘தங்கலான்’ படத்தை வெளியிடுவதற்கு முன்னர் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஞானவேல் ராஜா தரப்பில் அந்த தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘தங்கலான்’ படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, படம் திட்டமிட்டபடி நாளை வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.