சென்னை: கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி சரண் இயக்கத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக ‘அசல்’ என்ற தமிழ் படத்தில் நடித்த பாவனா, 15 வருட இடைவெளிக்கு பிறகு ‘தி டோர்’ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- மலையாளத்தில் நடித்த நான் தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் அறிமுகமானேன்.

என் அப்பா பாலச்சந்திரன் ஒளிப்பதிவாளராக இருந்ததால் சினிமா துறையை பற்றி பல விஷயங்களை என்னிடம் சொல்வார். தமிழில் நடிக்க தயங்கியபோது, மிஷ்கின் திருவனந்தபுரம் வந்து என்னிடம் கதை சொன்னார். பிடித்ததால் நடித்தேன். நான் தமிழில் நடிப்பதில் என் அப்பாவுக்கு ஆர்வம் இல்லை. பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு சென்னை வந்தபோது ரசிகர்கள் அளித்த அன்பையும் ஆதரவையும் கண்டு வியந்தேன். அவர்கள் இன்னும் என்னை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார்கள்.
மலையாள மெகா ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தாலே நிறைய கற்றுக்கொள்ளலாம். மலையாளம், கன்னடம், தமிழ் என பல படங்களில் நடித்ததால் தெலுங்கில் பல படங்களில் நடிக்க முடியவில்லை. ‘தீபாவளி’ படத்தில் நான் நடித்த சுசி கேரக்டரை ரசிகர்கள் நினைவு கூர்ந்து குறிப்பிடும் போது மிகுந்த மகிழ்ச்சி. தமிழில் ‘அசல்’ படம் என்னுடைய கடைசிப் படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பல இயக்குனர்கள் என்னை படத்துக்கு எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாததால் தமிழில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்துள்ளேன்.
பின்னர், என்னை நேரில் பார்க்கும் இயக்குனர்கள் இதைப் பற்றி என்னிடம் கூறுவார்கள். இனிமேல் தமிழில் எனக்கு இடைவெளி இருக்காது. என் தம்பி ஜெயதேவ் இயக்கிய ‘தி டோர்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறேன். தமிழில் வெளியான பிறகு தொடர்ந்து நடிப்பேன். பேய் படம் என்றாலும் எனக்கு பேய் பயம் இல்லை.