சென்னை: படம் இயக்கி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை செய்யவில்லை என்று ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகளை முடித்து, இந்த ஆண்டில் இறுதியில் ‘சூர்யா 45’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
‘ரெட்ரோ’ ரிலீஸுக்கு பின் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே. பாலாஜி, ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனை செய்வார். கிரிக்கெட்டை பொருத்தவரை ஆங்கிலத்தில் கமெண்டரி கேட்டு வந்த ரசிகர்களுக்கு தமிழில் நகைச்சுவை கலந்து ஆர்.ஜே. பாலாஜி கொடுக்கும் கமெண்டரி வெகுவாக கவர்ந்தது.
ஆனால் ஐபிஎல் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்த சீசனில் ஆர்.ஜே. பாலாஜி கிரிக்கெட் வர்ணனை செய்யவில்லை. இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வருஷத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடிச்சது மார்ச் மாதத்தின் கடைசி, ஏப்ரல், மே தான். இந்த நேரத்தில் நான் எனக்குப் பிடித்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் கமெண்டரியில் நான் வரமாட்டேன்.
நான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். இப்பொழுது ஒரு படத்தை இயக்கி, அதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். அதனால் இந்த வருடம் ஐபிஎலுக்கு பிரேக் விட்டுவிட்டேன். நிச்சயம் அடுத்த சீசனில் வருவேன். ஆனால் என்னை பார்ப்பவர்கள் அண்ணன் நாளைக்கு வந்துருவீங்களா? நேத்து ஏன் வரல நாளைக்கு வருவீங்களா? என்று கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது” என்று எமோஷனலாக பேசியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.