சாம்பார், ரசம் போன்ற குழம்புகளுடன் சரியான சைடிஷ் தேடுவது பலருக்கும் கவலைக்குறிய விடயமாக இருக்கும். ஏனெனில் அனைத்து காய்கறிகளும் சாம்பாருக்கு ஏற்றவையாக இருக்காது. ஆனால், வாழைக்காய் என்பது எந்த குழம்புக்கும் சூப்பரான காயாக இருக்கின்றது. பொதுவாக, வாழைக்காய் புளிக்குழம்பு அல்லது பொரியல் செய்வதுதான் வழக்கம், ஆனால் அதனை வேறொரு விதமாகவும் சுவையாகச் செய்ய முடியும். இதன் புதிய மற்றும் வித்தியாசமான சுவை கொண்ட முறைதான் வாழைக்காய் பொடி வறுவல்.

இந்த வாழைக்காய் பொடி வறுவல் கச்சிதமாக வித்தியாசமான சுவையை தரும். காரைக்குடி வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த வறுவல், அதில் சேர்க்கப்படும் பொடியால் மேலும் சுவையாக மாறும். இதை செய்ய வேண்டிய பொருட்கள் வாழைக்காய், புளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் வறுத்து பொடி. அரைக்க வேண்டிய பொருட்கள்: வர மிளகாய், வர மல்லி, கடலைப்பருப்பு, தேங்காய் துருவல்.
முதலில், கடாயை சூடாக்கி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வர மிளகாய், வர மல்லி, கடலைப்பருப்பு, மற்றும் தேங்காய் துருவலை வறுத்து, சிறிது நேரம் ஆறவிட வேண்டும். பிறகு, இவற்றை மிக்ஸ்சியில் பொடி என அரைத்துக்கொள்ள வேண்டும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். புளி நன்கு ஊறிய பிறகு, அதை கரைத்து, கொதிக்க வைக்கவும்.
புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், வாழைக்காயை இரு துண்டுகளாக வெட்டி, அதனை கொதிக்கும் நீரில் போட்டு சிம்மில் வேக வைத்து சிறிது நேரம் ஆறவிட வேண்டும். அதன் பிறகு, சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின், கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, பிறகு அதனுடன் வாழைக்காய் துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து, கிளற வேண்டும்.
இறுதியில், வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, நன்றாக கிளறி, பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்க வேண்டும். இப்போது சுவையான வாழைக்காய் பொடி வறுவல் தயார்!