மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க பாட்டி கைப்பக்குவத்தில் செய்யப்படும் பூண்டு மிளகு குழம்பு சிறந்த மருந்தாகும். பத்து நாட்கள் வரை வைத்தாலும் சுவை குறையாமல் இருக்கும்.
இதற்கு தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கருவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள், தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, இஞ்சி, புளி, பெருங்காயம் பொடி, வெல்லம்.

முதலில் அடுப்பில் மண் பாத்திரம் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். பின்னர் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதில் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடுகு ஆகியவற்றை வறுத்து எடுத்து வைக்கவும். கருவேப்பிலை மற்றும் இஞ்சியையும் தனியாக வறுத்து வைக்கவும்.
வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது அந்த அரைத்த கலவையை குழம்பில் சேர்த்து, புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும்.
சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறுதியில் வெல்லம், பெருங்காயம் பொடி, நல்லெண்ணெய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும்.
இவ்வாறு தயாராகும் பூண்டு மிளகு குழம்பு சுவையானதோடு மருத்துவ குணமும் நிறைந்ததாக இருக்கும். மழைக்காலத்தில் இதை சாப்பிட்டால் உடலை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.