தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
வறுத்து பொடி செய்வதற்கு…
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் – 5
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் போட்டு, கிழங்கு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும், குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். எண்ணெய் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு மொறுமொறுவென்று வரும் வரை குறைவான தீயில் வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.