விற்பனை மையங்களில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பருவநிலை மாற்றங்கள், அதிக வெப்பம் மற்றும் மழையினால் விளைச்சல் குறைந்து இருப்பதால், தேங்காயின் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக ஒரு டன் தேங்காய் ரூ. 55,000 இருந்து ரூ. 60,000 வரை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையிலும் ஒரு தேங்காயின் விலை 25 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால், நாள்தோறும் தேங்காய் வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் கடுமையான சிக்கலில் உள்ளனர்.

தேங்காய் இல்லாமல் ஒரு நாளும் சமையல் முடியாது என்பதே பலரின் கருத்து. குறிப்பாக சட்னிக்கு தேங்காயின் பங்கு முக்கியமானது. ஆனால் விலை அதிகரிப்பால் தேங்காயை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், அதே தேங்காய் சட்னி சுவையில், தேங்காய் இல்லாமலேயே சட்னி செய்யும் எளிமையான முறையை தெரிந்து கொண்டால், செலவினத்தை குறைக்கும் ஒரு சீரான மாற்றமாக அமையும். இதற்காக வறுத்த கடலை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்தி சட்னி தயாரிக்கலாம்.
முதலில் மிக்ஸியில் வறுத்த பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். சட்னி கொஞ்சம் தடிப்பாக வேண்டுமெனில் ஒரு மேசை கரண்டி புழுங்கல் அரிசி மாவை சேர்த்து அரைக்கலாம். இது தேங்காயின் பதத்தை ஈடுகொடுத்து சட்னிக்கு தேவையான அடர்த்தியை வழங்கும். சட்னி தயார் ஆனதும், கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்ற வேண்டும்.
இந்த வகையில் தயாரிக்கப்படும் சட்னி, தேங்காய் இல்லாமலேயே அதே சுவையை வழங்கும். இது மிகவும் சுலபமானதும், செலவிழக்காததும் என்பதுடன், தினசரி உணவில் சத்தான சேர்க்கையாக அமையும். வீட்டில் தேங்காய் இல்லாத நாளிலும் சட்னியை இவ்விதமாக செய்து சாப்பிடலாம். இது ஒரு சிறந்த மாற்றுவழி என்பது உறுதி.