நெல்லிக்காய் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்று. இயற்கையான விந்தை சக்தியுடன் கூடிய இந்த பழம், உடல் நலம் காக்கும் பல நன்மைகள் கொண்டது. அந்த நெல்லிக்காயை நீண்ட நாட்களுக்கு சேமிக்க, தேனில் ஊறவைத்து பயன்படுத்தும் பழக்கம்தான் “தேன் நெல்லிக்காய்”. இது ஆறுமாதங்கள் வரை கெடாமல் இருக்கக்கூடியதால், முன்கூட்டியே அதிகளவில் செய்து வைத்துக் கொள்ளலாம்.
தேன் நெல்லிக்காய் செய்ய, முதலில் ஒரு கிலோ நெல்லிக்காயை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிக்க வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காயை சிறிது நேரம் வேகவைக்க வேண்டும் – முழுமையாக வேகாமல், தோல் மிருதுவாக இருந்தால் போதும். பிறகு இதனை நீள்வடிவமாக நறுக்கி, சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சில தேக்கரண்டி தேன் ஊற்றி நெல்லிக்காய் துண்டுகளை அடுக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கிலும் தேனையும் நெல்லியையும் மாறி மாறி சேர்த்து நன்றாகக் குலுக்க வேண்டும்.
இப்போது, பாட்டிலை மூடி வெயிலில் ஒரு வாரம் வைத்தால் தேன் நெல்லி நன்கு ஊறி தயாராகிவிடும். விருப்பமுள்ளவர்கள், இரண்டு நாட்கள் வெயிலில் வைத்த பிறகு நெல்லிக்காயை எடுத்து தினமும் காயவைத்து, இரவில் மீண்டும் தேனில் ஊறவைத்து வைத்து சாப்பிடலாம். இதன்மூலம், சுவையும் அதிகரிக்கும், மேலும் சுவாச கோளாறுகள் மற்றும் இருமலுக்கு இது ஒரு இயற்கை டானிக்காக அமையும்.
தினமும் சிறிதளவு தேன் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைகளுக்கு தினமும் இரண்டு துண்டுகள் கொடுத்தால் பார்வை குறைபாடுகள் இல்லாமல் வளர்வார்கள். தேன் நெல்லிக்காய் சாறு கூட தனியாக வைத்திருந்து பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும்.