சென்னை: பிரண்டை எலும்புகளுக்கு வலுக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்தது. இதில் உள்ள மருத்துவக்குணங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. இந்த பிரண்டையில் குழம்பு வைப்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பிரண்டை இளசாக – 1 கப்
புளி – 50 கிராம்,
சின்னவெங்காயம் – 50 கிராம்
தக்காளி – 1,
பூண்டு – 7 பல்,
சாம்பார்பொடி – தேவைக்கேற்ப,
வெல்லம் – சிறிது,
கடுகு – 1/2 தேக்கரண்டி,
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி,
உளுந்துப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது,
பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப.
வறுத்துப்பொடி செய்ய
நல்லெண்ணைய் – 1 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி,
தனியா – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது,
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி,
கசகசா – 1/4 தேக்கரண்டி
செய்முறை: பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு அலசி பொடியாக நறுக்கவும். நறுக்கிய துண்டுகளை சிறிது நேரம் வெயிலில் வைக்கலாம். தக்காளி, வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை சிறிது நீரில் கரைத்து கொள்ளவும்.
வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், உளுந்துப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் பிரண்டையை சேர்த்து வதக்கவும். தீயைக் குறைத்து 10 நிமிடம் வரை வதக்கவும். புளிக்கரைசலில் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள் தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து கொதிக்கவிடவும். பிரண்டை வெந்த பின் வெல்லத்தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.