சமையல் என்பது முழு மனதுடன் முழு ஈடுபாட்டுடன் செய்யும் ஒரு அருமையான கலை. சமையல் சில சமயங்களில் நமது கவலைகளை கூட மறந்து போக செய்யும். அத்தகைய சமையலில் பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சின்னச்சின்ன விஷயங்கள் கூட நமது சமையலை மிகச் சிறப்பானதாக்கி விடும். சமையலுக்கு உதவியாக இருக்கும் சில எளிமையான குறிப்புகளை நாம் இப்போது தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
சமைப்பதற்கு 1/2 மணி நேரம் முன்னதாக அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஊற வைத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். ஊறுகாய் செய்யும் போது உப்பை லேசாக வறுத்து போட்டால் ஊறுகாயின் மேல் வெண்மை நிறம் படியாது. முட்டையை வேக வைக்கும் போது தண்ணீருடன் 2 சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் இருக்கும். இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும். சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது.
பூரிக்கு மாவு பிசையும் போது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும். முட்டைகோஸ் சமைக்கும்போது அதன் வெள்ளை நிறம் மாறி சுவையும், மணமும் இல்லாமல் போய்விடும். அப்படி மாறாமல் இருப்பதற்கு ஒரு துண்டு இஞ்சியை இடித்து சேர்த்து சமைப்பதால் அதன் மணம் மாறாமல் அப்படியே இருக்கும். சாம்பாருக்கு பருப்பு வேகவைக்கும்போது குக்கரில் தண்ணீர் விட்டு பருப்பை போட்டு தீயை அதிகமாக வைக்கும்போது கொதித்து நுரை மேலே பொங்கி வரும். அந்த நுரையை கரண்டியால் எடுத்து அகற்றிய பிறகு பூண்டு, காயம், மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், போட்டு குக்கர் மூடி போட்டு வேகவைக்கலாம். அவ்வாறு செய்வதால் வாயு தொந்தரவு ஏற்படாது. வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வெயிலில் அரை மணி நேரம் வைத்து பின்னர் பொரியல் செய்தால் வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு நீங்கி விடும்.
பூண்டின் தோலை சுலபமாக உரிக்க அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை அணைத்துவிட்டு தேவையான பூண்டு பற்களை போட்டு கிளறி மூடி வைத்து விடவும். 10 நிமிடம் ஆனதும் எடுத்து உரித்தால் சுலபமாக தோல் வந்து விடும். ரவா தோசை சுடும் போது மாவில் இரண்டு தேக்கரண்டி கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை நல்ல மொறுகலாக வரும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு மேஜைக்கரண்டி தயிரும், வெந்நீரும் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைக் கல்லில் எண்ணெய் தேய்ப்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்து துடைத்து விட்டு ஊற்றினால் தோசை நன்றாக விரிந்து வரும். ஒரு கைப்பிடி சாதத்தை மிக்ஸ்சியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து அவித்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
காப்பி பில்டரில் அடிப்பாகத்தில் உள்ள துவாரங்கள் அடைத்துக் கொண்டால் காஸ் அடுப்பை ஆன் பண்ணி சிம்மில் வைத்து பில்டரை இடுக்கியால் பிடித்து பர்னருக்கு மேல் காட்டினால் அடைத்துக் கொண்டிருக்கும் தூள்கள் விழுந்து விடும். பிரியாணி சமைப்பதற்கு எப்போதும் புதிதாக அரைத்த இஞ்சி பூண்டு விழுதை உபயோகித்தால் மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.