சென்னை: சைவம் மட்டும் சாப்பிடுபவர்களுக்காக ஒரு சூப்பர் வெஜ் மீன் குழம்பு செய்யும் முறை. வெஜ் மீன் என்று ஒன்று இருக்கா என்ற அதிர்ச்சி அடையாதீர்கள். அதாவது மீன் குழம்பு டேஸ்ட். ஆனால் வெஜ் குழம்பு.
தேவையானவை
நல்லெண்ணெய் – 50 மில்லி
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
வெந்தயம் – சிறிதளவு
சோம்பு , சீரகம் – தலா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (இரண்டாக கீறியது )
கறிவேப்பிலை – தேவையான அளவு
பூண்டு -10 பல் (இடித்தது )
பெரிய வெங்காயம் -1 கிலோ
புளி-25 கிராம் (கரைத்து வடிகட்டவும்)
மீன் செய்ய
தட்டைப்பயறு -50 கிராம் (ஊற வைத்தது)
பச்சைப்பயறு – 50 கிராம் (ஊற வைத்தது)
பச்சை மிளகாய் – 5
சோம்பு – சிறிதளவு
மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
லச்சக்கட்டை கீரை – 3 இலை
(இந்த கீரை சேர்த்தால் மட்டுமே மீனுக்கு கிடைப்பது போன்ற கறுப்பு நிறம் கிடைக்கும். இந்த இலை கிடைக்காதவர்கள் வாழை இலை பயன்படுத்தலாம். ஆனால் இதில் வைக்கும் கலவைக்கு கறுப்பு நிறம் கிடைக்காது.)
மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் – 15 கிராம்
தக்காளி – 3
காய்ந்த மிளகாய் -10 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
கசகசா -சிறிதளவு
துருவிய தேங்காய் – தேவையான அளவு
செய்முறை: மீன் செய்ய கொடுத்த பொருட்கள் எல்லாவற்றையும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இனி லச்சக்கட்டைக் கீரையின் இலையில் மாவை கொலுக்கட்டை போன்று வைத்து நடுவில் ஒரு மரக்குச்சியை (மீனின் நடுவில் முள் இருப்பது போல) மாவின் நடுவில் வைக்கவும்.
இலையை ரோல் செய்து ஒரு குச்சியால் குத்திவிட்டால், மாவு வெளியே வராது. இதனை இட்லித்தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும். ஆறியதும் நடுவில் உள்ள மரக்குச்சியை எடுத்துவிட்டு மீன் துண்டுகள் போல வெட்டியெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மசாலா அரைக்கக் கொடுத்த பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்க விடவும். பின்பு அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். தேவையான அளவு உப்பு, எண்ணெயில் பொரித்த துண்டுகளை சேர்த்து கால் மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்து, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.