தீபாவளி பண்டிகை ஒளியையும் மகிழ்ச்சியையும் தந்துவிடும் நேரம். புதிய உடைகள், இனிப்புகள், பட்டாசுகள் அனைத்தும் மக்களின் இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆனால் இந்த ஆண்டு பண்டிகை மேஜையில் பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி மற்றும் மாப்பிள்ளை சாம்பா கொண்டு பலகாரம் செய்வது ருசி மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.

கருப்பு கவுனி அரிசி முறுக்கு
இந்த முறுக்கு தயாரிக்க கருப்பு கவுனி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து காயவைத்து அரைக்க வேண்டும். அதில் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், ஓமம், எள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு பிசைந்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தால் சுவை மிக்க கருப்பு கவுனி முறுக்கு தயாராகிவிடும். இது இரும்புச் சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்களில் சிறந்து விளங்கும்.
மாப்பிள்ளை சாம்பா அதிரசம்
மாப்பிள்ளை சாம்பா அரிசி மற்றும் பச்சரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை பாகு பதத்தில் காய்ச்சி அதில் ஏலக்காய் பொடியுடன் மாவை சேர்த்து கலக்க வேண்டும். பிறகு எண்ணெயில் அதிரசமாக தட்டி பொரித்தால் சுவையான அதிரசம் தயாராகும். இந்த அரிசி ரகம் உடல் வலிமையையும் நீண்ட ஆயுளையும் தரும்.
இவ்விரு பலகாரங்களும் நம் பாரம்பரியத்தின் சுவையையும் நலனையும் ஒருங்கே கொண்டுள்ளன. தீபாவளியில் இவை செய்து சுவைத்தால், வீட்டில் மகிழ்ச்சி பெருகும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.