2025-ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து தொடரை வெற்றிகரமாக துவங்கியது. மறுபுறம் பாகிஸ்தான் தங்களது சொந்த மண்ணில், முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்து, பிப்ரவரி 23-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான், இந்தியாவை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பையும் வைத்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதாக விடாது என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவர், இந்திய அணியில் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் நிறைந்திருப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இந்திய அணியில் 1 முதல் 5 வரையிலான இடங்களில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சதத்தை அடித்து வெற்றி பெற்றுக் கொடுக்கக் கூடியவர்கள். அக்சர் படேல் 5வது இடத்தில் விளையாடினால், இந்திய அணியில் இருக்கும் திறமையின் ஆழத்தை கற்பனை செய்யுங்கள்.”
கங்குலி, “வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் இந்தியா லேசாக தடுமாறிய போது, கேஎல் ராகுல் வந்தார். அதற்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் காத்திருந்தார்கள். அந்த வகையில் இந்தியா திறமையின் வீடாக இருக்கிறது” என கூறினார்.
“நாம் கொண்டிருக்கும் சிஸ்டம் மற்றும் கிரிக்கெட்டை விளையாடும் விதம் மிகவும் பிரபலமானது. இந்தியா எப்பொழுதும் வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கும்” என்று கங்குலி தெரிவித்தார். இந்தியாவின் ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று அவர் கூறினார். “துபாயில் வெற்றி பெறுவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. அங்குள்ள ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் திரும்பும் எனக்கு தெரியும். ஆனால் பாகிஸ்தான் சுழலை நன்றாக எதிர்கொள்ள மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் எளிதாக வெல்ல முடியாது என்று கங்குலி எதிர்பார்க்கிறார், மேலும் இந்தியா தொடரில் வெற்றி பெறும் அணியாக இருப்பதாக அவர் நம்புகிறார்.