இந்தியாவின் சீனியர் லெக் ஸ்பின்னர் அமித் மிஷ்ரா, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார். 42 வயதான இவர், டில்லியில் பிறந்தவர். 2000ஆம் ஆண்டு ஹரியானா அணிக்காக முதல் தர போட்டியில் காலடி எடுத்து வைத்தார். 2003ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்போது கும்ளே, ஹர்பஜன் போன்ற மூத்த பந்துவீச்சாளர்கள் இருந்ததால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

2008ஆம் ஆண்டு மொகாலி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அமித் மிஷ்ரா, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்தடுத்த காலங்களில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் நிலைபெற்றதால், அவர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார். மொத்தத்தில் 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகள், 36 ஒருநாள் போட்டிகளில் 64 விக்கெட்டுகள், 10 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகள் எடுத்து சர்வதேச அளவில் 156 விக்கெட்டுகளைப் பெற்றார்.
இந்திய பிரிமியர் லீக்கில் அவர் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தினார். மொத்தம் 162 போட்டிகளில் 174 விக்கெட்டுகளைப் பெற்று, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார். குறிப்பாக, மூன்று முறை ஹாட்ரிக் சாதனை படைத்த ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவருக்கு உள்ளது. இந்திய அணிக்காக கடைசியாக 2017ல் விளையாடிய அவர், 2024ல் லக்னோ அணிக்காக பிரிமியர் லீக்கில் கடைசி போட்டி ஆடியிருந்தார்.
ஓய்வு அறிவித்த பிறகு அமித் மிஷ்ரா, “25 ஆண்டு நீண்ட பயணம் மறக்க முடியாதது. சச்சின், தோனி, ரோகித் சர்மா போன்ற வீரர்களுடன் விளையாடியது பெருமை. ஆரம்பத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தியதில் மனநிறைவு உள்ளது. ரசிகர்களின் அன்பும் ஆதரவும் என்றும் நினைவில் நிற்கும்,” என்றார். இனி அவர் பயிற்சியாளர் அல்லது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.