பாரிஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் நாளை (26-ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. இந்த திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தகுதி சுற்று இன்று தொடங்குகிறது. உலக கோப்பை வில்வித்தை தொடர்களில் பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ள போதிலும் ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை. இதற்கு இம்முறை தீர்வு காண இந்திய அணியினர் முயற்சிக்கக்கூடும். மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்று பிற்பகல் 1 மணிக்கும், ஆடவர் தனிநபர் ரேங்கிங் சுற்று மாலை 5.45 மணிக்கும் தொடங்குகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவில் இருந்து 6 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. ஆடவர் அணியில் தீரஜ் பொம்மதேவாரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோரும் மகளிர் அணியில் பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா பகத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தரவரிசையின் அடிப்படையில் தகுதி பெற்றிருந்தனர். இதனால் இவர்கள் வில்வித்தையில் நடைபெறும் 5 பிரிவுகளிலும் போட்டியிட உள்ளனர்.
சீனியர்களான தருண்தீப் ராய், தீபிகா குமாரி ஆகியோர் 4-வது முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர். இன்றைய தகுதி சுற்று போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய அணி வரும் பட்சத்தில் போட்டி அட்டவணை சாதகமாக அமையக்கூடும். தகுதி சுற்று போட்டியில் 53 நாடுகளைச் சேர்ந்த 128 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளரும் 72 முறை அம்புகளை எய்வார்கள். இதில் புள்ளிகள் அடிப்படையில் போட்டித் தரவரிசை எண் வழங்கப்படும். பிரதான நாக் அவுட் சுற்று வரும் 28-ம் தேதி மகளிர் அணிக்கான இறுதிப் போட்டியுடன் தொடங்குகிறது. ஆடவர் அணி இறுதிப் போட்டி 29-ம் தேதியும், தனிநபர் எலிமினேஷன் போட்டி 30-ம் தேதியும் நடைபெறுகிறது. கலப்பு அணி இறுதிப் போட்டி, மகளிர் தனிபர் இறுதிப் போட்டி ஆகியவை ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறுகிறது.
முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ள கொரியாவிடம் தோல்வியடைந்து வரும் இந்தியஅணிக்கு தகுதிச் சுற்று முக்கியமானதாக இருக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வில்வித்தை வீரர்கள் அனைவரும் முதல் 30 இடங்களுக்கு மேல்வந்து ஒரு அணியாக 9-வது இடத்தைப் பிடித்தனர். அதேவேளையில் மகளிர் பிரிவில் தீபிகா குமாரி 9-வது இடத்தைப் பிடித்திருந்தார்.
இம்முறை இந்திய ஆடவர் அணி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஷாங்காயில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதுவும் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த கொரியாவை வீழ்த்தியிருந்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தருண்தீப் ராய் அனுபவம் வாய்ந்தவராக திகழ்கிறார். அவருடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற பிரவீன் ஜாதவும் களமிறங்குகிறார். இவர்களுடன் முதன்முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்கும் தீரஜ் பொம்மதேவாராவும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்.
தீரஜ் பொம்மதேவாரா கடந்த மாதம் அன்டல்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இத்தாலியின் மவுரோ நெஸ்போலியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றிய தீரஜ் பொம்மதேவாரா, பிரகாசிக்கக்கூடிய வீரராக இருக்கக்கூடும்.
இந்திய மகளிர் அணியில் தீபிகா குமாரி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 16 மாதங்களில் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய தீபிகா குமாரி, கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காயில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தீபிகா குமாரிக்கு கொரியாவின் அன் சான் கடும் சவால் அளித்தார். இம்முறை அவர், களமிறங்கவில்லை.
ஆனால் மற்றொரு கொரிய வீராங்கனையான லிம் சி-ஹியோன் சவால் கொடுக்க காத்திருக்கிறார். இந்த ஆண்டு லிம் சி-ஹியோனுக்கு எதிராக தீபிகா குமாரி இரு தோல்விகளை சந்தித்துள்ளார். இதில் ஷாங்காய் உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அடங்கும்.
இந்திய மகளிர் அணியில் தீபிகா குமாரியுடன் அங்கிதா பகத், பஜன்கவுர் ஆகியோரும் உள்ளனர். இவர்கள் இருவரும் முதன்முறையாக ஒலிம்பிக்கில் களமிறங்குகின்றனர். பஜன் கவுர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 26 வயதான அங்கிதா பகத், 2021 மற்றும் 2022-ம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.
காலிறுதி சோகம்.. ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை கால் இறுதி சுற்றை கடந்தது இல்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி, கலப்பு அணி, தனிநபர் பிரிவில் தீபிகா குமாரி கால் இறுதி சுற்றுவரை முன்னேறியிருந்தனர். தொடங்கும் முன்பே சர்ச்சை: பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே சர்ச்சை தொடங்கிவிட்டது. கடந்த வாரம் இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளரான தென் கொரியாவைச் சேர்ந்த பேக் வூங் கி-க்கு ஒலிம்பிக் கிராமத்தில் அங்கீகார அட்டை மறுக்கப்பட்டது. இதையடுத்து அவரை இந்திய ஒலிம்பிக் சங்கம் திரும்ப அழைத்தது. ஆனால் பேக் வூங் கி விலகுவதாக அறிவித்தார்.
ரூ.1 கோடி வருடாந்திர ஒப்பந்தத்தில் ஒலிம்பிக் போட்டிக்காக பேக் வூங் கியை, இந்திய வில்வித்தை சங்கம் நியமனம் செய்திருந்தது. பிரான்ஸ் நாட்டில் இந்திய வில்வித்தை அணிகள் மேற்கொண்ட 10 நாட்கள் பயிற்சி முகாமிலும் பேக் வூங் கி முக்கிய பங்கு வகித்திருந்தார். தற்போது அவர், இல்லாத நிலையில் சோனம் சிங் பூட்டியா, பூர்ணிமா மஹதோ பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளனர்.