ராஜ்கிர்: பீஹாரில் நடைபெற்று வரும் 12வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் சூப்பர்-4 சுற்றில், இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
இந்திய அணி ‘ஏ’ பிரிவில் சீனாவை வீழ்த்தி முன்னேறியிருந்தது. அதேபோல், நடப்பு சாம்பியனான தென் கொரியா ‘பி’ பிரிவில் மலேசியாவுடன் இணைந்து முன்னேறியது. மழை காரணமாக ஆட்டம் சுமார் 50 நிமிடங்கள் தாமதமாகத் துவங்கியது.

ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் ஹர்திக் சிங் இந்தியாவுக்கு முதல் கோல் அடித்தார். ஆனால், 12வது நிமிடத்தில் ஜிஹன் யங் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் கோல் அடித்து கொரியாவை சமநிலைக்கு கொண்டுவந்தார். அதன்பின், கிம் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 2வது கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி 2-1 என கொரியாவுக்கு சாதகமாக முடிந்தது.
இரண்டாம் பாதியில் இந்திய அணி பல வாய்ப்புகளை தவறவிட்டது. 52வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் அளித்த பந்தை மன்தீப் சிங் நெட்டுக்குள் தள்ளி இந்தியாவுக்கான சமநிலையை ஏற்படுத்தினார். இறுதியில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற்றன.
இந்த டிரா போட்டி, புள்ளிகள் அடிப்படையில் சூப்பர்-4 சுற்றின் நிலைப்பாட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.