இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து தொடரில் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிராஜ் அனைத்து ஐந்து போட்டிகளிலும் பங்கேற்ற நிலையில், பும்ராவுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள், உடல் தகுதி காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டது என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக்குமாறு முகேஷ் அம்பானியிடம் கேட்டிருப்பேன் என தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை விட, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முக்கியம் என்பதை அம்பானியிடம் எடுத்துரைப்பேன் என்றும் கூறினார். அவசியமெனில் ஐபிஎல் போட்டிகளில் சிலவற்றில் மட்டுமே பங்கேற்கச் செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார்.
வெங்சர்கார், பும்ரா சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், அவரை முழுமையான உடல் தகுதியில் வைத்திருப்பது முக்கியம் என்றார். இங்கிலாந்து போன்ற கடினமான தொடரில் பும்ரா முழு ஆற்றலுடன் விளையாட, ஓய்வு அவசியம் என்று வலியுறுத்தினார். பும்ராவின் தேசப்பற்று, இந்திய அணிக்காக அவர் செய்த பங்களிப்புகள் குறித்து யாரும் சந்தேகம் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், பும்ரா மீண்டும் காயம் அடையாமல் கவனமாக நடத்தப்பட வேண்டும் என்றார். கடந்த காலங்களில் இந்திய அணிக்காக தனது முழுத்திறனையும் வழங்கிய பும்ரா, தற்போது நல்ல ஓய்வு பெற்று மீண்டும் ஆற்றலுடன் திரும்பி வர வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என வெங்சர்கார் கூறினார்.