சென்னை: இந்திய கிரிக்கெட் உலகம் மற்றும் தமிழ் சினிமா உலகம் இரண்டுக்கும் ரசிகர்கள் அளிக்கும் அன்பு மிகுந்தது. இந்த இரண்டு துறைகளுக்கும் இடையே ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது. சில கிரிக்கெட் வீரர்கள், தங்கள் விளையாட்டு வாழ்க்கையோடு சேர்த்து சினிமாவிலும் தங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமா என்ற சரணாலயத்தில் அவர்கள் சீசன் பறவைகளைப் போல் வந்து, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்துள்ளனர்.
முக்கியமாக 1980 மற்றும் 1990களில் பல பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் விருந்தினராகவோ அல்லது சிறிய கதாபாத்திரங்களிலோ திரையில் தோன்றியிருக்கிறார்கள். ரசிகர்கள் விரும்பும் அவர்களின் கிரிக்கெட் திறமைக்கு கூடுதலாக, கலைத்திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதனால் சினிமா ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.
சிலர் நகைச்சுவை தோற்றங்களிலும், சிலர் சண்டை காட்சிகளிலும், சிலர் சினிமா பாடல்களில் கூட காமியோ ரோலில் நடித்துள்ளனர். இப்படிப்பட்ட தோற்றங்கள் ரசிகர்களின் மனதில் நீண்டநாள் நினைவாக நிலைத்திருக்கின்றன. தமிழ் சினிமா எப்போதும் புதிய முயற்சிகளை வரவேற்கும் என்பதற்கே கிரிக்கெட் வீரர்கள் நடித்திருப்பது ஒரு சான்று.
தமிழ் சினிமா மற்றும் கிரிக்கெட் இரண்டுமே தமிழர்களின் இதயத்தில் ஆழமாக பதிந்தவை. அதனால் தான் இவ்விரண்டு துறைகளின் சங்கமம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்காலத்திலும் மேலும் பல கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் தங்கள் முகத்தை காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த், கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமல்லாமல், சினிமாவிலும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார். மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி நடித்த பிரியமான தோழி திரைப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்தார். கதையின் முக்கிய தருணத்தில் மாதவனுக்கு ஆலோசனை வழங்கும் வேடத்தில் அவர் தோன்றியிருந்தார்.
மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் ஸ்ரீகாந்த் பாராட்டைப் பெற்றார்.இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் சடகோபன் ரமேஷ். இந்திய அணிக்காக தொடக்க வீரராக விளையாடிய அவர், சந்தோஷ் சுப்பிரமணியன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அண்ணனாக நடித்தார். அதோடு, மதகஜராஜா படத்தில் விஷாலின் நண்பராகவும், போட்டா போட்டி திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது, ரமேஷ் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹர்பஜன் சிங். தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், பிரண்ட்ஷிப் மற்றும் டிக்கிலோனா படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். பந்துவீச்சில் புயலாக இருந்த ஹர்பஜன், சினிமாவிலும் அதே ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். நான்காவது இடத்தில் உள்ளவர் வருண் சக்கரவர்த்தி. ஒரு காலத்தில் இயக்குனராக வரவேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர், ஜீவா திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் கிரிக்கெட் வீரராக நடித்தார். அந்த வேடத்திற்கு தினமும் 600 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஐந்தாவது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் முன்னாள் ஆல்-ரௌண்டர் இர்பான் பதான். விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படத்தின் மூலம், கிரிக்கெட் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தன் திறமையை நிரூபித்தார். இவ்வாறு, பல கிரிக்கெட் வீரர்கள் தமிழ் திரையுலகில் தங்கள் தடத்தை பதித்துள்ளனர். ரசிகர்கள், எதிர்காலத்திலும் மேலும் பல வீரர்கள் சினிமாவில் கால் பதிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.