ஐபிஎல் 2025 தொடரின் 43வது போட்டி ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. புள்ளிப் பட்டியலில் இறுதியில் தவழும் இந்த இரு அணிகளும் இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 6 தோல்விகளை சந்தித்துள்ளன. மீதமுள்ள ஆறு போட்டிகளில் வெற்றிப் பெறும் அவசர அவசியம் இரு அணிகளிலும் இருப்பதால், இந்த மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஹைதராபாத் அணி தங்களது ஆட்டத்தில் வலுவான பேட்டிங் திறனை கொண்டிருந்தாலும், அந்த ஆட்டத்தைக் களத்தில் ஒரு ஸ்திரத்தன்மையுடன் வெளிப்படுத்துவதில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கதிலிருந்தே பேட்டிங் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது, அதனால் அவர்களது வெற்றிநம்பிக்கையும் ஒரு சவாலாகவே இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடரில் கடந்த தோல்விகள் காரணமாக சிஎஸ்கே அணி இளம் வீரர்கள் சாய்க் ரசீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோருக்கு வாய்ப்பு அளித்து புதிய அணிக்கட்டமைப்பை அமைத்துள்ளதாகவும், சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்புடைய சூழ்நிலை இருந்தால், சிஎஸ்கேவின் ஜடேஜா மற்றும் நூர் அஹ்மத் போன்ற தரமான ஸ்பின்னர்கள் முக்கிய பங்காற்றுவர் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹைதராபாத் அணி தொடர்ச்சியான அதிரடி பேட்டிங்கில் நிலைத்திராமல் தவிப்பது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சஞ்சய் பங்கர் கூறினார். “தோனி தலைமையில் சிஎஸ்கேவின் சுழல் பலம் இந்தப் போட்டியில் முக்கியமாக அமையும். சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் சேப்பாக் பீல்ட், சிஎஸ்கேவின் வெற்றிக்கு வழிவகுக்கும்” என அவர் ஜியோஸ்டார் சேனலில் பேசியுள்ளார்.
மொத்தத்தில், இந்தப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை 99% இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரு அணிகளும் இறுதி வரை போராடும் ஆட்டமாக இது மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.