விசாகப்பட்டினம்: அசுதோஷ் அதிரடியால் லக்னோவை கடைசி ஓவரில் வீழ்த்தி டெல்லி அணி ‘திரில்’ வெற்றி பெற்றுள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று (திங்கட்கிழமை) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களும், மிட்செல் மார்ஷ் 72 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே ஜேக் பிரெசர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோ பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் இரட்டை செக் வைத்தார். அடுத்து வந்த சமீர் ரிஸ்வியும் நிலைக்கவில்லை 4 ரன்களில் நடையை கட்டினார்.
விக்கெட்டுகள் இழந்தாலும் டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாகவே விளையாடியது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெறுவதுபோல் தெரிந்தது. இருப்பினும் ஸ்டப்ஸ் 34 ரன்கள் (22 பந்துகள்), விப்ராஜ் நிகாம் 39 ரன்கள் (15 பந்துகள்) என விரைவாக அடிக்க ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இவர்கள் ஆட்டமிழந்தாலும் அசுதோஷ் சர்மா நிலைத்து விளையாடி டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 1 விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் முதல் 2 பந்துகளில் மொகித் சர்மா 1 ரன் அடிக்க, 3-வது பந்தில் சிக்சர் அடித்து அசுதோஷ் சர்மா ஆட்டத்தை முடித்து வைத்தார்.
19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 211 ரன்கள் அடித்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அசுதோஷ் சர்மா 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். லக்னோ தரப்பில் ஷர்துல் தாகூர், சித்தார்த், திக்வேஷ் ரதி மற்றும் பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.