லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறார். 2வது சுற்றில் பிரிட்டனை சேர்ந்த டேனியல் ஈவன்ஸை எதிர்த்து களம் இறங்கிய ஜோகோவிச், மிகுந்த ஆதிக்கத்துடன் 6-3, 6-2, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், பிரான்சின் ஆர்தர் கசாக்சை 4-6, 6-2, 6-4, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, இத்தாலியின் லூசியா புரோன்செட்டியை எதிர்கொண்டார். முதல்செட்டில் வெற்றிகொடுத்து அதனை 6-1 என கைப்பற்றிய ஆன்ட்ரீவா, இரண்டாவது செட்டில் கடும் போட்டிக்குப் பிறகும் 7-6 என வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது சுற்றுக்குள் தனது இடத்தை உறுதிசெய்தார். மேலும், அமெரிக்காவின் எம்மா நவரோ, ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவாவை 6-1, 6-2 என தோற்கடித்தார்.
முன்னதாக மூன்றாவது சுற்றுக்குள் முன்னேறிய வீரர்கள் பட்டியலில் பிரிட்டனின் எம்மா ரடுகானு மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா இடம் பெற்றனர். எம்மா ரடுகானு, செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரூசோவாவை 6-3, 6-3 என வீழ்த்தினார். நவோமி ஒசாகா, மற்றொரு செக் வீராங்கனியான கேட்ரினா சினியகோவாவை 6-3, 6-2 என சுலபமாக தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி மற்றும் மெக்சிகோவின் மிகுயல் ரெய்ஸ்-வரேலா ஜோடி, அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிக் மற்றும் லேர்னர் டியன் ஜோடியை 6-4, 6-4 என வென்றது. ஆனால், இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் பெல்ஜியத்தின் சான்டர் கில்லே ஜோடி, ஜெர்மனியின் கெவின் மற்றும் டிம் ஜோடியிடம் 3-6, 4-6 என தோல்வி அடைந்தது.