இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து மண்ணில் ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையின் கீழ் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. தொடக்க போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அந்த போட்டியில் வரலாற்றில் முதல் முறையாக 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தாலும், கடைசி நேரத்தில் ஃபினிஷிங்கில் தளர்வு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஏழு கேட்ச்கள் கைவிடப்பட்டது, பும்ராவை தவிர்ந்த மற்ற பவுலர்கள் சீரற்ற நிலை காண்பித்தனர்.

முன்னணி வீரர்களின் தவறுகளுக்கு மேலாக, கேப்டன் சுப்மன் கில் தனது முதல் போட்டியில் அனுபவமற்ற கேப்டன்ஷிப் காட்டியதாக விமர்சனம் எழுந்தது. முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் போன்றவர்கள் இதைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், முன்னாள் இந்திய அணித் தலைவர் முகமது அசாருதீன் இதற்கும் எதிராகப் பேசினார். முதல் போட்டியிலேயே கிலை விமர்சிப்பது நியாயமல்ல என்றும், அவருக்கு தேவையான வாய்ப்பு மற்றும் நேரம் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாருதீன் மேலும் கூறியதாவது, இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், பின்தள பேட்டிங் வரிசையின் மோசமான செயல்பாடும், பவுலிங் துறையில் பும்ரா மீது அதிகம் சார்ந்திருப்பதும் தான். வெற்றிக்கு நம் பவுலிங் தரமானதாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும், பும்ராவுக்கு துணையாக மற்ற பவுலர்கள் நன்கு செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இன்னும் அனுபவமிக்க பவுலர்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அடுத்த போட்டியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அவர் நேரடியாக பரிந்துரை செய்துள்ளார். பர்மிங்காம் நகரில் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கவுள்ள இரண்டாவது போட்டியில், சர்துல் தாக்கூரை நீக்கி, இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் இந்திய அணிக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது.