இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் நாளை லீட்ஸில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-2027 தொடரின் ஒரு பகுதியாக இந்திய அணி ஐந்து டெஸ்ட்களில் பங்கேற்கிறது. சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர்கள் ஓய்வுபெற்றதால் இளம் வீரர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அணியில் ஜெய்ஸ்வால், ராகுல், கருண் நாயர், பன்ட், நிதிஷ் குமார், ஜடேஜா என சிலருக்கு இடம் உறுதியாகியுள்ளது. ஆனால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு இல்லாதிருக்கலாம். ஷர்துல் தாகூர் அணியில் சேர்வது கேள்விக்குறி தான். பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஷர்துல், கடந்த தொடரிலும் நல்ல பங்களிப்பு செய்துள்ளார். எனினும், நிதிஷுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பந்து வீச்சில் பும்ரா, சிராஜ், குல்தீப், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெறலாம். அர்ஷ்தீப் சிங் அறிமுகம் இன்னும் தாமதமாகலாம். இடைவேளையில், கோலி தனது வீட்டில் சுப்மன் மற்றும் சக வீரர்களுடன் சந்தித்து அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ரயில் பயணத்தின்போது வீரர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்தனர்.
இந்தியா இங்கிலாந்தில் இதுவரை 67 டெஸ்ட்களில் 9 வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகள் மோதிய 136 டெஸ்ட்களில் இந்தியா 35 வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 48 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. இதில் கிராலே, ஜோ ரூட், ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.