சட்ட விரோத சூதாட்ட செயலி மூலம் நாடு முழுவதும் பண மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த செயலி மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், செயலியின் விளம்பரங்களில் நடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர் சோனு சூட் ஆகியோருக்கு ஈ.டி. சம்மன் அனுப்பியுள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது, இந்த செயலி மூலம் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. விளம்பரங்களுக்கு அவர்கள் கோடிக்கணக்கான தொகை பெற்றிருப்பதோடு, வரி ஏய்ப்பும் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பான தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, மூவரும் டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராபின் உத்தப்பா செப்டம்பர் 22, யுவராஜ் சிங் செப்டம்பர் 23, சோனு சூட் செப்டம்பர் 24 காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூதாட்ட செயலி வழக்கில் பிரபலங்கள் தொடர்பு கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், விசாரணை மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.