கோவிட்-19 இரண்டாம் அலையின்போது, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய தலைமைப் பயிற்சியாளருமான கௌதம் கம்பீர், தனது அறக்கட்டளையின் மூலம் ஃபேபிஃப்ளூ மருந்துகளை உரிய அனுமதி இல்லாமல் அதிக அளவில் வாங்கி மக்களுக்கு விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. விசாரணை நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கம்பீர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையை இடைநிறுத்த வேண்டும் என்றும், அவர் முன்னாள் எம்.பி., இந்திய அணியின் கேப்டன் மற்றும் தற்போது தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கோரினார். ஆனால் நீதிபதி சதீஷ் சிங்கர் சிக்கா, இப்படிப்பட்ட வாதங்களை கடுமையாக நிராகரித்தார். பெயர், செல்வாக்கு கொண்டு அழுத்தம் கொடுக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
நீதிமன்றம், “இது சாதாரண மனு என்றால் பரிசீலிப்போம். ஆனால் உங்களின் பெயரை முன்வைத்து சலுகை பெற முயற்சி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டது. கம்பீரின் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது கம்பீர் தாக்கிய மனுவை ஆகஸ்ட் 29 அன்று விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. அதேசமயம், விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 8 அன்று மீண்டும் வழக்கை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கும், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கும் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது.